Welcome To Arun Hearing Aid

  • +91 80125 70701
  • +91 94432 43171
ear-itching-and-irritation
காதுக்குழாய் என்பது என்ன ? காதுக்குழாயில் ஏற்படும் விளைவுகள் ?
February 16, 2021
ANSD-Ear-problem
செவித் திறன் இழப்பு – ஆடிட்டரி நியூரோபதி ஸ்பெக்ட்ரம் டிசார்டர் (ANSD)
February 17, 2021

காதின் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் ?

செவியானது (காதானது )ஒலியை உணர்தல் மற்றும் சமநிலையை பேணுதல் என்ற இரு செயல்களை புரிந்து வருகிறது .நம்முடைய காது மண்டலமானது வெளிக்காது (புறச்செவி), நடுக்காது (நடுச்செவி), உட்காது (உட்செவி) என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

புறச் செவி (வெளிக்காது):

புறச்செவியானது செவி மடல் ,செவிக்குழல் (புறச்செவிக்குழல்),செவிப்பறை ஆகியவற்றை உள்ளடக்கியது .செவி மடல் ஆனது குருத்தெலும்புகளால் ஆனது,இது ஒலி அலைகளை சேகரித்து செவிக்குழலுக்கு அனுப்புகிறது .வளைந்த தன்மையுடைய செவிக்குழலானது செவிப்பறை வரை நீண்டு காணப்படும் ஒரு அமைப்பாகும் . இந்த செவிக்குழலில் காணப்படும் மயிரிழைகளும் ,செருமன் எனும் மெழுகும் ,வெளிப்பொருட்கள் உள்ளே வராமல் தடுக்க பயன்படுகிறது .
செவிக்குழலின் முடிவில் இணைப்புத் திசுவான செவிப்பறை உள்ளது .இந்த செவிப்பறை வெளிப்புறம் தோளினாலும் ,உட்புறம் கோழைப்படலத்தினாலும் மூடப்பட்டுள்ளது .

நடுச் செவி :

நடுச் செவியில் சுத்தி ,பட்டடை மற்றும் அங்கவடி போன்ற சிற்றெலும்புகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு காணப்படுகின்றன .இம்மூன்று சிற்றெலும்புகளும் ஒலி அலைகளை உட்செவிக்கு கடத்த உதவுகின்றன.சுத்தி எலும்பின் ஒரு முனையானது செவிப்பறையுடனும் ,மறுமுனையானது பட்டடை எலும்புடனும் அசையும் வகையில் இணைந்துள்ளது .இதில் பட்டடை எலும்பானது சுத்தியல் மற்றும் அங்கவடி எழுப்புகளுக்கு இடையே அமைந்துள்ளது .
மனித உடலில் மிகச் சிறிய எலும்பான அங்கவடி எலும்பு ஒரு முனையில் பட்டடை எலும்புடனும், மறுமுனையில் உட்செவியின் நீள்வட்ட பலகணியுடனும் இணைந்துள்ளது .நடுச்செவியிலுள்ள "யூஸ்டேஷியன் குழல்" ஆனது நடுச் செவியை தொண்டைப்பகுதியுடன் இணைக்கிறது.யூஸ்டேஷியன் குழல் ஆனது செவிப்பறையின் இருபுறமும் உள்ள காற்றழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது .

உட்செவி :

உட்செவியானது இரண்டு வகை திரவத்தால் நிரப்பப்பட்ட பகுதிகளை கொண்டுள்ளது .அவை எலும்பிலான சிக்கல் பாதை மற்றும் சவ்விலான சிக்கல் பாதை ஆகும் .

எலும்பிலான சிக்கல் பாதை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது .அவை காக்லியா ,வெஸ்டிபியூல் மற்றும் அரைவட்டக் கால்வாய்கள் .இதில் காக்லியா அமைப்பானது நத்தை சுருள் போன்ற அமைப்பை கொண்டுள்ளது .இது மூன்று அமைப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது .அவை ஸ்கேலா வெஸ்டிபியூலை ,ஸ்கேலா டிம்பானி மற்றும் ஸ்கேலா மீடியா ஆகும் .

ஸ்கேலா வெஸ்டிபுலை மற்றும் ஸ்கேலா டிம்பானி ஆகிய இரு அறைகளும் பெரிலிம்ஃப் எனப்படும் சூழ்நிணநீராலும் (Perilymph), ஸ்கேலா மீடியா என்டோலிம்ஃப் (Endolymph) எனப்படும் அகநிணநீர் திரவத்தாலும் நிரம்பியுள்ளன. காக்ளியாவின் அடிப்புறத்தில் ஸ்கேலா வெஸ்டிபியூல் நீள்வட்டப் பலகணியுடனும் (Oval window), ஸ்கேலா டிம்பானி வட்டப்பலகணியுடனும் (Round window) தொடர்புகொண்டுள்ளது .